×

பண மோசடி வழக்கு!: ஐகோர்ட் உத்தரவின்படி ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா..!!

நாமக்கல்: பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராசிபுரம் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சரணடைந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த இவர் ஒரு மருத்துவரும் கூட. சமூக நலத்துறையின் கீழ் வரும் சத்துணவு அமைப்பில் வேலை கொடுப்பதாக கூறி 15க்கும் மேற்பட்டோரிடம் 76 லட்சம் ரூபாய் பணம் வசூலித்துக் கொடுக்க சொன்னார் என்றும் ஆனால் பணியையும் கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் மோசடியில் ஈடுபடுகிறார் எனவும் அவரது உறவினர் குணசீலன் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கில் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சரோஜா மீது பண மோசடி வழக்கு தொடர்ந்த குணசீலன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சம்பந்தமாக ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை தொகையை செலுத்தி ஜாமின் பெறலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தற்போது ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரோஜாவின் கணவர் யோக ரஞ்சனும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரும் சரணடைந்தார். இருவருக்கும் தலா பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் கட்டி ஜாமின் பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்து சரோஜா ஜாமின் கோர உள்ளார்.


Tags : Minister ,Saroja ,Razipuram ,Icourt , Money laundering, Rasipuram court, AIADMK ex-minister Saroja
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி